மதுரை சித்திரை திருவிழா - திருத்தேர்கள் கட்டும் பணி தொடங்கியது!
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோயிலாகும். இதில் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று இன்று காலை சாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் முன்னே எழுந்தருளிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா். நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இதனிடையே இரண்டாம் நாளான இன்று காலை சுவாமியும், அம்மனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறக்கூடிய திருத்தேரோட்டத்திற்க்காக திருத்தேர்கள் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த பணியில் 25 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் விரதம் இருந்து திருத்தேர்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டைகள், கயிருகள், அலங்கார துணிகள் கொண்டு திருத்தேர்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் பணிகள் நிறைவடைய உள்ளது. தேரோட்டத்தை போது மீனாட்சியம்மன் ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் - பிரியா விடை ஒரு தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக வரும் மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 7 ஆம் தேதி திக்கு விஜயமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 9 ஆம் தேதி தேரோட்டமும், மே 10 ஆம் தேதியுடன் தீர்த்தவரியுடன் விழா நிறைவுபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12 ஆம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.