பொங்கலுக்குப் பிறகு மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து! பயணிகள் அதிர்ச்சி!
மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸில் பொங்கலுக்குப் பிந்தைய நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் நாளுக்கு முன் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்துமே முன்பதிவுகளால் நிரம்பியுள்ளது. இதேபோல, பொங்கல் முடிந்த பிறகு சென்னைக்கும் பிற நகரங்களுக்கும் திரும்பி வர திட்டமிட்டு முன்பதிவு செய்திருப்போரும் காத்திருப்போரும் பல ஆயிரம் பேர்.
இந்நிலையில், திடீரென, ரயில்வே நிர்வாகத்திடமிருந்து மதுரை – சண்டிகர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு 17.01.2024 அன்று இயக்கப்படவுள்ள ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால், சென்னையில் தொடங்கி சண்டிகர் வரையிலான நகர்களுக்குச் செல்ல வேண்டிய ரயில் பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படும் இந்த மதுரை - சண்டிகர் விரைவு ரயில், சென்னை, விஜயவாடா, வாராங்கல், சந்திரபூர், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மீரட், அம்பாலா வழியே சண்டிகர் செல்கிறது. பயணத்துக்கு இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை சரி செய்து உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து மதுரை – சண்டிகர் அதிவிரைவு ரயிலை வழக்கம் போல இயக்குவது மட்டுமே ரயில்வே மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும்.
சென்னையில் மட்டுமே பல லட்சங்களில் மக்கள் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 90% தீபாவளி, பொங்கல் நாட்களில் மட்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.