மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான பரிசை வேலு என்ற காளைக்காக அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்தி காரை பெற்றுக்கொண்டார்.
உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் என பலர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் மஞ்சள் நிற உடையணிந்து வீரர்கள் களமிறங்கினர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி 5.15 மணிக்கு நடந்து முடிந்தது. சுற்றுக்கு 100 மாடுகளும், 50 வீரர்களும் களமிறங்கியது. வாடிவாசலில் சீறிய காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். சில காளைகள் யாரும் தொட முடியாத வகையில் வாடிவாசலில் நின்று விளையாடும் காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.
மொத்தம் 817 காளைகள் கலந்துகொண்டன. மேலும் 400 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசை வேலு என்ற காளை பெற்றது. மாட்டின் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்தி காரை பெற்றுக்கொண்டார்.