வீட்டை அபகரிக்க கொலைமிரட்டல் விடுத்ததாக மதுரை டிஎஸ்பி வினோதினி மீது புகார்! பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையர் வினோதினி தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கஸ்தூரி கலா என்பவர் தொடர்ந்த மனுமீது மதுரை காவல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த கஸ்தூரி கலா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் எனது மகன் கிருஷ்ணகுமாருடன் வசித்து வருகிறேன். எனது மகன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்று வரும் சூழலில் நான், எனது மருமகள் மற்றும் பேரனுடன் வீட்டில் இருக்கிறேன்.
இந்நிலையில் மதுரை டிஎஸ்பி வினோதினி எனது வீட்டினை அவருக்கு விற்பனை செய்ய
சொல்லி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். கடந்த ஜூலை 9ஆம் தேதி
எனது மகன் வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்திய நிலையில், டிஎஸ்பி
வினோதினியின் தூண்டுதலின் பேரில் அவரது தங்கை பொய் புகார் அளிக்க, என் மகனை
விசாரணை எனக்கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் எனது மகன் மனதளவில் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், டிஎஸ்பி வினோதினி சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தி வருகின்றனர். டிஎஸ்பி வினோதினி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக எங்களை தொந்தரவு செய்து வருகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொந்தரவு செய்யும் டிஎஸ்பி வினோதினி மீது மதுரை மாநகர் காவல் துறை ஆணையர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத காவலால் மன உளைச்சலுக்கு உள்ளான எனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி தனது உறவினருக்கு வீட்டை விற்பனை செய்ய வேண்டும் என மிரட்டி உள்ளர். மேலும் வீட்டில் உள்ள பெண்களை குண்டர்களை வைத்து மிரட்டி உள்ளார். மேலும் மனுதாரர் மகனை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து தொந்தரவு செய்துள்ளார்.எனவே இவர் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் புகாருக்கு
உள்ளான டிஎஸ்பி வினோதினி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு
விசாரணையை ஒத்தி வைத்தார்.