மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - மார்ச் மாதம் நடைபெற்ற பணி என்ன? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்டட பணிகள் நடைபெறுவது குறித்த புகைப்படங்களை மருத்துவமனை நிர்வாகம் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார். 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 2023-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் துவங்காமல் இருந்து வந்தது.
தென் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு தற்போது நல்ல செய்தி வந்துள்ளது. கடந்த மார்ச் 4-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்து வாஸ்து பூஜை தொடங்கியுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஓரிரு வாரங்களில் கட்டுமான பணிக்கான பூஜை தொடங்கும் என்றும், அதனைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இந்நிலையில், கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பணிகள் என்ன என்பது குறித்தும் புகைப்படங்களுடன் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளது.