அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சர்ச்சை - மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம்!
தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெறாமல் மதுரை எய்ம்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கான விளக்கத்தை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு தடுப்புசுவர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான விவகாரத்தில் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அது சம்பந்தமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;
”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எங்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளும், விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் கட்டுமானத்திற்கு முந்தைய செயல்பாடுகள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தமிழ்நாடு அரசிடம் (GoTN) சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமானப் பணிகள் தொடங்கும். “ என மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.