அவதூறு அறிக்கை வெளியிடத் தடை - ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவி உடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்தாண்டு அறிவித்தார். இதையடுத்து அவர் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருங்கி பழகுவதாக கூறப்பட்டது. அப்போதே இது குறித்த ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து அதற்கு ரவி மோகன் தரப்பில் இருந்து பதில் அறிக்கையும் வெளியாகின.
தொடர்ந்து திருமண விழா ஒன்றில் கெனிஷாவுடன் ரவி மோகன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இது குறித்து அவரது மனைவி ஆர்த்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தங்களது விவாகரத்து நடைமுறைகள் தொடர்வதாகவும், ஒரு காலத்தில் எனக்கு உறுதியளித்த பொறுப்புகளிலிருந்து ரவி மோகன் விலகிச் சென்றதாகவும் தெரிவித்தார். அத்துடன் தந்தை என்பது வெறும் பட்டப்பெயர் மட்டுமல்ல. அது ஒரு பொறுப்பு என்று கூறியிருந்தார்.
அதன் பின்னர் ரவி மோகன், இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன் என்றும் தன்னை தங்க முட்டை இடும் வாத்து போல் நடத்துவதாக பதிலறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து மீண்டும் ஆர்த்தி ரவி, எங்கள் பிரிவுக்கு 3வது நபரே காரணம் என பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். இப்படி மாறி மாறி இருவரும் தங்கள் பிரிவுகிடையில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்தனர். இதனிடையே ஆர்த்தி ரவியின் தாயும் ரவி மோகனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்.
தொடர்ந்து ரவிமோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கில், மாதத்திற்கு ரூ.40 லட்சம் ஜீவானாம்சம் வேண்டுமென ஆர்த்தி ரவி கோரியிருந்தார். அதன் பின்னர் ரவி மோகன் தன்னை பற்றி ஆர்த்தியும் அவரது தாயும் அவதூறு பரப்புவதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தங்களுக்கிடையான பிரச்னை பற்றி பொது வெளியில் அவதூறு கருத்துகள் கொண்ட அறிக்கை வெளியிட நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு தடை விதித்தனர். அத்துடன், இவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட மற்றும் விவாதிக்க சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.