#MadhyaPradesh | பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழுக்கமிட்ட நபர்… நீதிமன்றம் விதித்த வினோத நிபந்தனை!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதற்காக, அவருக்கு நீதிமன்றம் விநோத நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதை அடுத்து, போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் ஃபைசல் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தவறை ஒப்புக் கொண்ட ஃபைசல் தரப்பு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பாலிவால் உத்தரவிட்டார்.
அதன்படி, வழக்கு முடியும் வரை மாதத்தில் முதல் மற்றும் நான்காம் செவ்வாய்க்கிழமைகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி தேசிய கொடிக்கு 21 முறை மரியாதை செலுத்தி, ‘ஜெய் மாதா கி ஜே’ என்று முழக்கமிட வேண்டும் என்ற நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மாதத்தின் 4-ஆம் செவ்வாய்க்கிழமையான இன்று (அக்.22) மிஷ்ரோத் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான ஃபைசல், 21 முறை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்டார். இந்நிகழ்வின்போது, காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனையடுத்து, ஃபைசல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். தேசியக் கொடியை மதிக்கிறேன். மேலும், தேச விரோத முழக்கங்களை எழுப்பவோ, தேசியக் கொடியை அவமதிக்கவோ வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இனி, என் வாழ்நாளில் இந்த தவறை செய்ய மாட்டேன்.”
இவ்வாறு ஃபைசல் தெரிவித்தார்.