லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ - 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
தெற்கு கலிபோர்னியாவில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயானது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி 7-ம் தேதி காலை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது. வேகமாக வீசிய காற்றினால் தீயானது மளமளவென்று அப்பகுதி முழுவதும் பரவி 24 மணிநேரத்திற்குள் சுமார் 3000 ஏக்கர் பகுதியை அழித்து நாசம் செய்துள்ளது.
காட்டுதீயை அணைக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை செய்தாலும், அப்பகுதியில் பலத்த காற்று வீசிவருவதால் தீயானது மேலும் பரவக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயானால் பல மிருகங்களும் பறவைகளும் அழிவை சந்தித்து வருகின்றன.
இதற்கிடையே, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீ மற்றும் புகையின் இருப்பிடத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. காட்டுத்தீ பரவிய பகுதியை செயற்கைக்கோளானது படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தலைவர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பாளார்களுக்கு செயற்கைக்கோள்களில் இருந்து முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவிய காட்டு தீ பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது. தற்போது காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் கடந்த 4 நாட்களில் சுமார் 40,000 ஏக்கர் முழுவதும் தீ பற்றியுள்ள நிலையில் 29,000 ஏக்கர் பகுதி முழுமையாக தீயில் கருகிவிட்டது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய வணிக கட்டிடங்கள் தீக்கிரையாகி உள்ளன. தொடர்ந்து சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் பலத்த தீக்காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.