For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை” - இளையராஜா!

08:28 PM May 16, 2024 IST | Web Editor
“மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை”   இளையராஜா
Advertisement

இளையராஜா குறித்து சமீபகாலமாக நிறைய சர்ச்சை பேச்சுகள் உலவி வரும் நிலையில், தன்னை பற்றி பேசப்படும் விசயங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை என்று இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு நீதிபதி “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” ” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பற்றிக் கொண்டது. இரண்டு தரப்பிற்கும் நிறைய ஆதரவு கருத்துக்கள் இருந்தாலும், இளையராஜாவின் சமீபத்திய நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த பலர் அவர்மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துக்கொண்டும், நீண்டநெடிய பதிவுகளையும், வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கங்கை அமரன், சீனு ராமசாமி, சினேகன், ஜேம்ஸ் வசந்தன் முதலியவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், வைரமுத்து மீண்டும் சிலபதிவுகளை பதிவிட்டது தொடர்ந்து இந்த பிரச்னையை பேசுபொருளாக மாற்றினார். இசை பெரிதா? மொழி பெரிதா? என்றிருந்த பிரச்னை நீயா? நானா? என்ற நிலைக்கே சென்றது.

இந்நிலையில் தன்னைப்பற்றி நிறைய கருத்துகள் பகிரப்பட்டுவரும் நிலையில், அமைதியாக இருந்த இளையராஜா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார்.

அதில், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை! தன்னைப்பற்றிய நிறைய சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டும், வீடியோவாக வெளியிடப்பட்டும் நிறைய விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதிலெல்லாம் நான் கவனம் செலுத்துவதில்லை என்று இளையராஜா வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.

வீடியோவில் பேசியிருக்கும் இளையராஜா, ”எல்லோருக்கும் வணக்கம். என்னை பற்றி ஏதோ ஒருவகையில் நிறைய வீடியோக்கள் வந்துகொண்டிருக்கிறது என வேண்டியவர்களின் மூலம் நான் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவனம் செலுத்துவதில்லை, ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. நான் என்னுடைய வழியில் தெளிவாக சென்றுகொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில், கடந்த ஒரு மாதத்தில் நான் ஒரு முழு சிம்பொனியையே எழுதிமுடித்துவிட்டேன். சினிமா பாடல்களுக்கும் இசையமைத்துவிட்டு, இடையிடையே விழாக்களுக்கும் சென்றுவிட்டு மீதமிருக்கும் நேரத்தில் வெறும் 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை எழுதிமுடித்துள்ளேன். சினிமா இசை, பிண்ணனி இசை எதுவும் இல்லாமல் இசைப்பது தான் சிம்பொனி, அப்படியான இசையை எழுதிமுடித்துவிட்டேன் என்ற நல்ல செய்தியை ரசிகர்களாகிய உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Tags :
Advertisement