Look Back 2024 | மஞ்சுமல் பாய்ஸ் முதல் ஆவேஷம் வரை... இந்த ஆண்டு கலக்கிய மலையாள திரைப்படங்கள்!
இந்தாண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த மலையாள படங்களை பற்றி பார்க்கலாம்.
இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளை மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில், இந்தாண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த மலையாள படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
மஞ்சுமல் பாய்ஸ்
இந்த ஆண்டு வெளியான மலையாள படங்களில் பெரிதும் பேசுப்பட்ட திரைப்படம் 'மஞ்சுமல் பாய்ஸ்'. 'குணா' திரைப்பட பாடலான 'கண்மணி அன்போடு' என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. ரசிகர்கள் கவர்ந்த இப்படம் ரூ.240 கோடியை கடந்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தாக கூறப்படுகிறது.
ஆவேஷம்
ஃபகத் ஃபாசில் 'ரங்கன் சேட்டா'வாக மிரட்டிய திரைப்படம் ஆவேஷம். காமெடி, சென்டிமென்ட் கலந்த ஜாலியான படமாக உருவான இப்படம் ரசிகர்களை ஈர்த்தது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.150க்கும் மேல் வசூலித்து அசத்தியது.
பிரேமலு
வெறும் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் பிரேமலு. இப்படம் இந்த ஆண்டு இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. காதல், காமெடி கலந்த படமாக பிரேமலு திரைப்படம் உருவாகி இருந்தது.
ஆடு ஜீவிதம்
பிரித்விராஜ் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகி மிரட்டிய திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்தில் பிருத்விராஜின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படம் ரூ.160 கோடி வசூலித்தது. ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான மலையாள படங்களில் இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது.
குருவாயூர் அம்பலநடையில்
பிரித்திவிராஜ், பசில் ஜோசப் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடும் காமெடி கலாட்டா படமாக வெளியான திரைப்படம் 'குருவாயூர் அம்பலநடையில்'. இப்படத்தின் மூலம் நடிகை நிகிலா விமல் டிரெண்ட் ஆனார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் பாடலான 'அழகிய லைலா' என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சூக்ஷ்மதர்ஷினி
லேட்டாக வந்தாலும் இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது 'சூக்ஷ்மதர்ஷினி' திரைப்படம். நஸ்ரியா நசீம், பசில் ஜோசப் நடிப்பில் அண்மையில் வெளியாகி அசத்திய இப்படம் த்ரில்லர் படங்களிலேயே ஒரு தனி ரகம். இப்படமும் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
கிஷ்கிந்தா காண்டம்
ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளிவந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்திய படம் கிஷ்கிந்தா காண்டம். இந்த படத்தின் ஒவ்வொரு டிவிஸ்ட்டும் உங்களை பிரமிக்க வைக்கும். இப்படத்தின் கதை மெதுவாக நகர்ந்தாலும் ஒரு இடத்தில் கூட ரசிகர்களுக்க போர் அடிக்காமல் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
ஆட்டம்
இந்த வருடத்தின் சிறந்த மலையாள படம் என பலரும் இந்த படத்தை சொல்கிறார்கள். சமகாலத்துக்கு தேவையான அரசியலை பேசிய மிக முக்கியமான த்ரில்லர் படம் என்று இப்படத்தை சொல்லலாம்.
பிரமயுகம்
மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் பிரமயுகம். திகில் கலந்த த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம் நல்ல வசூலை அள்ளியது. ரசிகர்களை கவர்ந்த இப்படம் பெரிதாக பேசப்பட்டது.
ஏஆர்எம்
டொமினோ தாமஸின் மாறுபட்ட நடிப்பில் பீரியட் ஆக்சன் அட்வென்ச்சர் வெளியான திரைப்படம் ஏஆர்எம் (அஜயன்டே ரண்டாம் மோஷனம்). இதில், டொமினோ தாமஸ் மூன்று கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தின் மூலம் டொமினோ தாமஸ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருந்தார்.