For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு... அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா - யார் இவர்?

09:10 PM Mar 15, 2024 IST | Jeni
தெலங்கானா வரை நீண்ட டெல்லி மதுபான கொள்கை வழக்கு    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா   யார் இவர்
Advertisement

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். யார் இந்த கவிதா..? விரிவாக பார்க்கலாம்...

Advertisement

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவாலுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்து வருகிறார்.

சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. சௌத் குரூப்பில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அமலாக்கத்துறையும் கவிதாவிடம் பல முறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

யார் இந்த கவிதா?

தெலங்கானா மாநிலம் கரிம்நகர் பகுதியில் 1978-ம் ஆண்டு கே.சந்திரசேகர் ராவ் - ஷோபா தம்பதிக்கு பிறந்தவர் கல்வகுந்த்லா கவிதா. ஹைதராபாத்தில் பி.டெக் பயின்று பட்டம் பெற்ற இவர், அமெரிக்காவில் முதுகலை பட்டம் பெற்றார். 2003-ம் ஆண்டு தேவனபள்ளி அனில் குமார் என்பரை கவிதா திருமணம் செய்த பின்னர், அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றினார். இவர்களுக்கு ஆதித்யா, ஆர்யா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து 2004-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் களமிறங்கினார். 2006-ஆம் ஆண்டு தனி மாநில கோரிக்கையை முன்வைத்து சந்திரசேகர் ராவ் மேற்கொண்ட தீவிர போராட்டத்தில் கவிதா கலந்துகொண்டு தனது தந்தைக்கு பக்க பலமாக நின்றார். தெலங்கானா மாநிலம் அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இயங்கிய கவிதா, 2006-ஆம் ஆண்டு ஜாக்ருதி என்ற அமைப்பை உருவாக்கினார். தனி மாநிலம் அமைவதற்கு பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் ஆதரவு திரட்டியதில் கவிதாவின் ஜாக்ருதி அமைப்பின் பங்கு மிக முக்கியமானதாகும்.

ஜாக்ருதி அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார் கவிதா. இதன்மூலம் பல இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இந்த அமைப்பின் மூலம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் கவிதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர் போராட்டத்தின் விளைவாக 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

அங்கு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியமைத்து சந்திரசேகர் ராவ் முதலமைச்சரானார். அதே ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு கவிதா வெற்றி பெற்றார். பின்னர் 2019 மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட கவிதா வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அனல் பறக்கும் பேச்சுகளால் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடும் கவிதா, கடந்த ஆண்டு தனியார் ஊடகம் நடத்திய மாநாட்டில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடும்ப ஆட்சி பற்றி விமர்சனம் செய்தார். அதற்கு பதிலளித்த கவிதா, பாஜகவைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, பாஜக கூட்டணி வைத்த சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோரை குறிப்பிட்டு அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

மேலும்,  “கேசிஆரின் 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்றே உங்களால் டிஃபெண்ட் செய்ய முடியவில்லை. உதாரணமாக போலாவரம் திட்டத்தில் ஊழல் மலிந்திருக்கிறது. அது உங்கள் கட்சிக்கு, பணத்தை கொட்டும் ஏடிஎம் போல திகழ்கிறது." என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த கவிதா, “போலாவரம் தெலங்கானா மாநிலத்திலேயே இல்லை, ஆந்திராவில் இருக்கிறது” என்று பதில் கொடுத்திருந்தது அவரை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கியது.

Tags :
Advertisement