எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி!
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அதனை மக்களவை செயலகம் ஏற்றுக்கொண்டது.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை நேற்று முன்தினம் (ஜூன் 17) அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இதையும் படியுங்கள் : இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு ரூ.45,000 கோடியில் 156 ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம்!
இந்நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று (ஜூன் 18) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகம் ஏற்றுக்கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளது.