For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமேதி மக்களவைத் தொகுதியில் ராபர்ட் வதேரா போட்டி?

11:09 AM Apr 05, 2024 IST | Web Editor
அமேதி மக்களவைத் தொகுதியில் ராபர்ட் வதேரா போட்டி
Advertisement

அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது விருப்பத்தை  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி,  இந்திரா காந்தியின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.  இங்கு கடந்த 1980-ம் ஆண்டு முதன்முறையாக இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி களமிறங்கி வெற்றி பெற்றார்.  விமான விபத்தில் அவர் உயிரிழந்த நிலையில்,  1981-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில்,  ராஜீவ் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  பின்னர் அவர்,  1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.  அவரது மறைவுக்குப் பின் 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமேதி தொகுதியில் கடந்த 2004,  2009,  2014 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு ராகுல்காந்தி வெற்றி பெற்ரார்.  2019 மக்களவைத் தேர்தலில் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எம்.பி.யானார். இதையடுத்து,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கியுள்ள நிலையில்,  இந்த தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  அமேதியில் ஐந்தாம் கட்டமாக  வரும் மே 20 ஆம் தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள் :சிப்ஸ் பாக்கெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மணமக்கள் ஊர்வல வாகனம்!

இந்நிலையில்,  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராபர்ட் வதேரா கூறியதாவது :

"ஸ்மிருதி இரானியை தேர்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணர்ந்துவிட்டனர்.  சோனியா காந்தியின் குடும்பத்தை விமர்சிப்பதைத் தவிர,  வேறெந்த பணியும் அவர் மேற்கொள்ளவில்லை.

சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால்,  அமேதி தொகுதியை தேர்வு செய்ய வேண்டுமென மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Tags :
Advertisement