ஜூன் 8ம் தேதி 3-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளதால், ஜூன் 8-ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் அடிபடையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்!
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தற்போதைய மக்களவை கலைப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வரும் 8 ம் தேதி( சனிக்கிழமை) மோடி 3வது முறையாக பதவி ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பிறகு உறுதியான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.