மக்களவைத் தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி?
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி நிலையை எட்டி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, கடந்த 13 ஆம் தேதி 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. ஆனால் இந்த இரு பட்டியலிலும் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு 23-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : அதிமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு!
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக-வின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி , பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியில் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாளை டெல்லி சென்று இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமையிடம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.