மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு - நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காலை 9:30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதி செய்து வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவில், டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, ஆகியோர் உள்ளனர். இவர்கள் தான் கூட்டணி கட்சிக்ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், திமுக கூட்டணியில் சிபிஐஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளன.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி. இக்கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. இந்நிலையில், திமுக மனிதநேய மக்கள் கட்சி முதற்கட்ட பேச்சு வார்த்தை நாளை தொடங்குகிறது. தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாளை காலை 9:30 மணி அளவில் திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையிலான குழு நாளை திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA தலைமையில் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA, பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.