மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது. இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ம் தேதி மாலை 6.30 வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ஒடிசாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்று தடையை மீறி கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஒடிசா மாநில தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் மே 13ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 25 ஆம் தேதி, ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.