மக்களவை தேர்தல் 2024 | தேனியில் நடைப் பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தேனி உழவர் சந்தை பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.
அதே நேரத்தில் பிரசாரத்திற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் ஓய்கிறது.
இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு வாக்கு சேகரிப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேனி சென்றிருந்தார். அப்போது இன்று காலை உழவர் சந்தை பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது, மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.