2024-ல் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர்கள் லிஸ்ட்…!
2024-ல் இந்திய அளவில் அதிக கவனம் பெற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பிரதமர் நரேந்திர மோடி:
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆனார். அதே போல் மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உள்ளிட்ட எதிர்மறை சம்பவங்களுக்கு இடையே மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தி:
ராகுல் காந்தி கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் இல்லை என்ற குறையை, மக்களவை தேர்தலில் 99 இடங்களில் காங்கிரஸை வெற்றிபெற வைத்ததன் மூலம் நிவர்த்தி செய்தியுள்ளார். மேலும் "பாரத் ஜோடோ" நீதி யாத்திரை அவரது செல்வாக்கை கணிசமாக உயர்த்தி இருப்பதை வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் கிடைத்த வெற்றி உணர்த்தியது. தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்றத்தை அதிரவைப்பதிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.
தேவேந்திர பட்னாவிஸ்:
மகாராஷ்டிர முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்த தேவேந்திர ஃபட்னவீஸ், 2022இல் நடந்த அரசியல் சதுரங்கத்தில் உத்தவ் தாக்கரே அரசை வீழ்த்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதலமைச்சராக கட்சித் தலைமையின் ஆணைக்கேற்ப நடந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 132 இடங்களில் இமாலய வெற்றிபெற உழைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
நிதீஷ் குமார்:
பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியைக் கட்டி எழுப்பிய நிதீஷ் குமார் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தராத அதிருப்தியில் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்தார். இதையடுத்து மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்று, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரியணை ஏற வழிவகுத்தது. ஆனால், பாஜகவுடனான நட்பு முரண் இன்று வரை தொடர்கிறது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது.
டி.ஒய்.சந்திரசூட்:
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கி 2024இல் அதிக கவனம் பெற்றார். இந்த ஆண்டு ‘ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடியது செல்லும்’, ‘தேர்தல் பத்திரம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்பன உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கினார். மேலும் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்காக ராமரைப் பிரார்த்தித்ததாகக் கூறியதும், அவரது வீட்டின் விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டதும் சர்ச்சையானது.
அதானி:
அதானி குழுமம் குறித்து 2023இல் ஹிண்டன்பெர்க் நிறுவனம் கிளப்பிய சர்ச்சை சற்றே ஓய்ந்த நிலையில், 2024 நவம்பரில் புது பிரச்னை முளைத்தது. இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் சில ஒப்பந்தங்களைக் கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்க, சர்வதேச முதலீட்டாளர்களிடம் அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டைப் பெற்றபோது லஞ்ச விவகாரத்தை மறைத்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டியது. அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு அரசு துணைபோவதாகத் தேர்தல் பிரச்சாரங்களிலும் நாடாளுமன்றத்திலும் முழங்கினார் ராகுல் காந்தி.
வினேஷ் போகத்
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துப் போராடிய வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை வித்தியாசம் காரணமாகப் பதக்கம் வெல்லும் வாய்ப்பைப் பறிகொடுத்தார். இதையடுத்து ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கி ஜுலானா தொகுதியைக் கைப்பற்றினார்.
மனு பாகர்:
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மனு பாகர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆனார். எனினும், கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது தொடர்பாக அவர் வெளிப்படுத்திய விமர்சனமும், பின்னர் அவர் அளித்த விளக்கமும் சர்ச்சையானது.
மருத்துவர்கள்:
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கில் மருத்துவமனை நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த மருத்துவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து மம்தா பானர்ஜி அரசை நிலைகுலைய வைத்தனர்.
அனுசுயா:
ஐஆர்எஸ் அதிகாரியான எம்.எஸ்.எம். அனுசுயா தனது பாலினத்தை ஆண் என மாற்றியதையும், பெயரை அனுகதிர் சூர்யா என மாற்றியதையும் மத்திய நிதித் துறை அமைச்சகம் அங்கீகரித்தது. இது இந்தியக் குடிமைப் பணியில் இதுவே முதல் முறை ஆகும். ‘பாலின அடையாளம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவு’ என்று 2014இல் நால்சா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த வரலாற்றுத் தருணத்துக்கு வழிவகுத்தது.