மதுபான கொள்கை வழக்கு - கேசிஆர் மகள் கவிதா கைது!
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ். மூத்த தலைவருமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் பல முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரிடம் அமலாக்கத்துறை முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசன்! திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு!
சோதனையின் முடிவில் கவிதாவை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர் விசாரணைக்காக கவிதாவை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கவிதா கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.