For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீதா, அக்பர் பெயர் கொண்ட சிங்கங்கள் - நீதிமன்றம் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத்!

12:47 PM Feb 18, 2024 IST | Web Editor
சீதா  அக்பர் பெயர் கொண்ட சிங்கங்கள்   நீதிமன்றம் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத்
Advertisement

சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்கள் அடைக்கப்பட்டிருப்பதால், மாநில வனத்துறைக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த பிப். 12-ம் தேதி 7 வயதுடைய அக்பர் எனும் ஆண் சிங்கமும், 6 வயதுடைய சீதா எனும் பெண் சிங்கமும் கொண்டு வரப்பட்டன. 

இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், “உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களும் ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர். அந்த பெயரை சிங்கத்திற்கு வைத்திருப்பதை அறிந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மன வேதனை அடைந்துள்ளது. இது, தெய்வ நிந்தனைக்கு இணையான செயலாகும். அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

சிங்கங்களுக்கு மாநில வனத்துறை பெயர் சூட்டியுள்ளது. மேலும், அக்பர் என்பவர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். 'அக்பர்' சிங்கத்துடன் 'சீதா' சிங்கத்தை வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயலாகும். சிங்கத்தின் பெயரை "சீதா" என்பதிலிருந்து வேறு ஏதேனும் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்துடன் தொடர்பில்லாத பெயரைக் கொண்டு விலங்கின் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வருகிற 20-ம் தேதி வரவுள்ளது. இதனிடையே, இரண்டு சிங்கங்களுக்கும் தாங்கள் பெயரிடவில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக பெயரிடுவதற்கு காத்திருப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிபுராவில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் மாற்றப்பட்டதாகவும், சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதற்கு முன்பே இந்த பெயர்தான் வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags :
Advertisement