படத்தின் தலைப்பை மாற்ற விக்னேஷ் சிவனுக்கு 'எல்ஐசி' நிறுவனம் நோட்டீஸ்!
லவ் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி படத் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, எல்.ஐ.சி நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், LIC: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருவது குறித்த விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதனைத்தொடர்ந்து எல்ஐசி என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எல்ஐசி தரப்பில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீஸில் எல்ஐசி என்பது தங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு என்றும் அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். படத்திற்கு எல்ஐசி பெயரை பயன்படுத்துவதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் மீது மக்களும் வாடிக்கையாளர்களும் கொண்டிருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.