ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!
தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 1800 ரயில்வே போலீசார் பணியாற்றி வரும் நிலையில், ரயில்களின் எண்ணிக்கையும், ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: கனமழை பெய்யக்கூடிய 27 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்; ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்….
ரயிலில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் போன்ற பலவிதமான குற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக காவலர்கள் நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாட்டு காவல்துறை டிஜிபி ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும். 50 சதவீதம் சம்பளம் ரயில்வே நிர்வாகத்தால் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ரயில்வே பாதுகாப்பு குறித்து ரயில்வே அதிகாரிகளுடன், காவல்துறை ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.