For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்...” - மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்..!

06:52 AM Dec 07, 2023 IST | Jeni
“கைகோர்ப்போம்    துயர்துடைப்போம்   ”   மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்
Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும்படி மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை ஓய்ந்தாலும் இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, துரைப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தனியார் படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். குடிதண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

பல்வேறு தன்னார்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளிலும், நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். #கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement