Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வெளியே வருவோம்... நீதிபதியை கொல்லுவோம்” - நீதிமன்றத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள்... 22 வருட பகையின் தொடர்ச்சி!

மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்...
07:10 AM Apr 25, 2025 IST | Web Editor
மதுரையில் 25 கிலோ கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவித்த போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்...
Advertisement

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு, வில்லாபுரம் கிழக்குத் தெரு
முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது 25 கிலோ உலர் கஞ்சா இலைகளை பையில் அவர்கள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர் மூவரையும் பிடித்து விசாரித்தபோது மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேலு இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்குமாறு கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதன்பிறகு திருச்சியில் கஞ்சா வழக்கில் சண்முகவேல் சிறைக்கு சென்றுவிட்டார் என கூறியுள்ளனர். இதையடுத்து பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மூவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து மூவரையும் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்து செல்ல தயாரானர். அப்போது நீதிமன்றத்தின் உத்தரவை கேட்ட குற்றவாளிகளான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் திடிரென நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நிதீமன்றத்தின் கண்ணாடிகளை கையால் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட கிளாமர் காளி கொலை வழக்கில் எதற்கு சுபாஸ் சந்திரபோசை என்கவுண்டர் செய்தீர்கள் என போலீசாரை மிரட்டியதோடு, நான் வெள்ளைக்காளி பசங்க தான், நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து நீதிபதியை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

அப்போது காவல்துறையினர் இறுகபிடித்தபோதும் துள்ளிகுதித்து தப்பியோட முயன்று, காவல்துறையினர் தடுத்ததால் காவல்துறையினரையும், வழக்கறிஞர்களையும் ஆபாசமாக பேசியதோடு தொடர்ந்து மிரட்டியபடி சென்றனர். அதனை பார்த்த காவல்துறையினரே மிரண்டுபோய் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலுக்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து பாதுகாப்பிற்கு அழைத்துவந்த காவல்துறையினர் அளித்த புகாரின் கீழ் இருவரையும் அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் குருசாமி மற்றும் வெள்ளைகாளி தரப்பு மோதலில் தொடர்ந்து 22 கொலை சம்பவங்கள் நடைபெற்று குருசாமி தரப்பான கிளாமர் காளி கொலை வழக்கில் வெள்ளைக்காளியின் ஆதரவாளரான சுபாஸ்சந்திரபோசை காவல்துறையினர் என்கவுண்டர் செய்த நிலையில், வெள்ளைக்காளியின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திலயே எவ்வித அச்சமுமின்றி நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்ததோடு, காவல்துறை, வழக்கறிஞர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதிக்கே பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கும் வகையில் மிரட்டல் விடுத்த இது போன்ற குற்றவாளிகள் மீது காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
MaduraiPoliceRowdyThreat
Advertisement
Next Article