“பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.. அல்லது போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து..” - ஹமாஸுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர்.
இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
Trump calls for all hostages to be returned by Saturday at 12:00.
If not, “all bets are off” and “let hell break out”. pic.twitter.com/WiegUG4ji6
— FUNKER530 (@FunkerActual) February 11, 2025
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் வரும் சனிக்கிழமை (பிப். 15) மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.