“மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு 34 ஆவது கணினி நுண்ணறிவு ஆய்வகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மாணவர்களிடம் AI தொழில்நுட்ப ஆய்வகம், மினி ட்ரோன் பயிற்சியில் அசத்தும் மாணவர்களின் செயல்பாடுகள், உள்ளிட்டவர்களை ஆய்வு செய்து உரையாற்றினார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 2152 கோடியை வாங்கி கொடுத்துவிட்டு பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது? என்று அண்ணாமலை கேள்வி கேட்கட்டும். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வேறு மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்.
கல்வியை மாநில பட்டியலோடு இணையுங்கள். எங்கள் மாணவ மாணவிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. கடந்த கல்வியாண்டில் இந்தியா முழுவதும் 600 தமிழ்நாடு மாணவர்கள் பல்வேறு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளனர்.
இத்தனை வருடத்தில் 6 லட்சதும் 23 ஆயிரம் கோடி தமிழ்நாட்டின் வரிதொகை மத்திய அரசுக்கு சென்றுள்ளது. இந்தத் தொகையில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கிடைத்திருக்கும். அதனால்தான் முதலமைச்சர் வடக்கில் இருக்கும் அரசா? வட்டிக்கடையை நடத்தும் அரசா? என்று மத்திய அரசை விமர்சித்தார்”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.