குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!
குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த
சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின்
நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குன்னூரில் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று
எடப்பள்ளி இந்திரா நகர் பகுதிக்குள் நுழைந்தது.
அப்போது அங்கு இருந்த பூனை பிடிக்க துரத்திச் சென்றது. ஆனால், பூனை தப்பி ஓடியது. பின்பு அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் வளர்ப்பு நாயை அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : கோடை சீசனுக்கு தயாராகும் குன்னூர் சிம்ஸ் பூங்கா!
ஏற்கனவே இந்த பகுதிக்கு மூன்று முறை சிறுத்தை வந்து சென்றது குறித்து
வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக, பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி குழந்தை உயிரிழந்த நிலையில்,
இந்நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.