மயிலாடுதுறையில் 6-வது நாளாக பிடிபடாத சிறுத்தை - தொடரும் தீவிர தேடுதல் வேட்டை!
மயிலாடுதுறையில் 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதனையடுத்து மக்கள் அளித்த தகவலின் பேரில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தை உலா வருவதை உறுதிசெய்த வனத்துறையினர் அதனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுத்தை நேற்று மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை
சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு
முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று
ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை வனத்துறை வந்து பார்த்த போது கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை . மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.