கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை உலா வருவதால், வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் கடந்த 16 நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வருகிறது. அந்தச் சிறுத்தை அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது. மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், நேற்று இரவு கணேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்து கொன்றது. இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரை கண்டித்தும் வனத்துறையினரை கிராமத்தில் இருந்து வெளியேறக் கூறியும் இன்று(செப்டம்பர் 25ம் தேதி) கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!
வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடியில் வனத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும், மேட்டூர்-மைசூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.