#TVKFlagல் யானைகளை அகற்றாவிட்டால் சட்டப்படி வழக்கு - BSP தலைவர் ஆனந்தன் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்றாவிட்டால் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகம் செய்தார். சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது' எனும் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த பாடலில் இடம் பெற்றுள்ள பல்வேறு காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. திராவிட இயக்கத்தின் முன்னோடியான பேரறிஞர் அண்ணா மற்றும் இரட்டை இலையை குறிக்கும் விதமாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது.
இருபெரும் அரசியல் தலைவர்களுக்கு நடுவே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் குறித்து அவர் இதைத் தான் சொல்ல வருகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். இதேபோல கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளின் படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆனந்தன் தவெக கொடி குறித்து தெரிவித்துள்ளதாவது..
” கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து ( 1 ) pic.twitter.com/OaZLU3jWhp
— BSP Tamilnadu (@BSPTamilnadu) August 22, 2024
உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.” என ஆனந்தன் தெரிவித்துள்ளார்.