For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம் - தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜமாத் நிர்வாகத்தின் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஒருவரை ஊர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தில் தாசில்தாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது
01:26 PM Apr 24, 2025 IST | Web Editor
ஜமாஅத் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஊர் நீக்கம்   தாசில்தாருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

ஜமாத் நிர்வாகத்தின் உத்தரவை மீறி நீதிமன்றம் சென்றதால் வழக்கறிஞர் ஒருவரை ஊர் நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்தும் ஊர் நீக்கம் செய்து உத்தரவிட்ட ஜமாத் தலைவர் மற்றும் செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் பகுதியைச் சார்ந்த முகமது அப்துல்லா இந்த மனுவைத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவைத் தாக்கல் செய்தார். அவர் ஒரு வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது..

நான் சட்டம் பயின்று ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். எனது ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் எனக்கும் கடந்த 2017 ஆம் வருடம் முஸ்லிம் ஜமாத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வந்தோம். இந்நிலையில் என் மனைவி என்னோடு வாழ விரும்பவில்லை என இஸ்லாமிய முறைப்படி பள்ளிவாசலில் வைத்து என்னிடமிருந்து விவகாரத்தை பெற்று சென்று விட்டார்.

ஜமாத் முன்னிலையில் எனது குழந்தைகளை வாரத்தில் ஒரு நாள் சந்திக்க அனுமதியும் அவர்களுக்கு பராமரிப்பு செலவு கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் மாதம் பராமரிப்பு செலவு தொகை கொடுத்து வருகிறேன். பராமரிப்பு செலவுகளை வாங்க மறுத்து எனது குழந்தைகளை பார்க்க எனது மனைவி குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை இதை எதிர்த்து நான் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன்.

என் குடும்ப பிரச்னைக்கு சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகியதை தவறு என்றும் பேச்சை மீறி நீதிமன்றம் சென்றதால் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஊர் நீக்கம் செய்தும் எங்கள் வீட்டில் நிகழும் மரணம் மற்றும் திருமண நிகழ்வில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் ஜமாத் வரி வசூல் செய்யக்கூடாது என்றும் இறந்தவர்களுக்கு அடக்கஸ்தலம் வழங்கப்படாது என்றும் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் தீர்மானம் போட்டுள்ளனர்.

ஜனநாயக நாட்டில் சட்டவிரோதமாக எங்களை ஊர் நீக்கம் செய்த ஜமாத் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களை ஊர் நீக்கம் செய்த ஜமாத் தலைவர் மற்றும் செயலர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அம்மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரணை செய்து நீதிபதி, “ காவல்துறை விசாரணையில் மனுதாரர் ஊர் நீக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதும் மனுதாரர் தன்னிடம் ஜமாத் நிர்வாகம் வரி வசூல் செய்யவில்லை என கூறுகிறார். எனவே உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் தாலுகா வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் ஊர் நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் வரி வசூல் செய்யாதது குறித்தும் ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement