பாஜக ஆட்சியில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என பிற்காலத்தில் சொல்லுவார்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
20 ஆண்டுகளுக்கு பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது, ஆனால் பாஜக ஆட்சியில் இருந்ததால், இந்தியாவிற்கு மட்டும் கொரோனா வரவில்லை என்று சொல்வார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகக் காட்சி அரங்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா உடல் காத்தோம், உயிர் காத்தோம்" நூலினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உடன் இருந்தனர்.
விழா மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
“நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறுவார். அதைப்போல இந்த புத்தகத்திற்கும் பெயர் வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் மக்களிடம் அச்சத்தை போக்க வேண்டும் என்று களத்திலே இறங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு எப்படி கொரோனாவை வென்றது என்பதை அந்த துறைக்கான அமைச்சரே புத்தகமாக எழுதியிருப்பது சிறப்பான முன்னெடுப்பு. அவர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் நேரடியாக சென்று பார்த்தார்.
முதலமைச்சருக்கு அன்றைய காலத்தில் படைத்தளபதியாக இருந்தவர் தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன். கொரோனா குறித்தான புத்தகங்கள் எழுதப்பட வேண்டும். இல்லையென்றால் 20 ஆண்டுகளுக்கு பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது, ஆனால் பாஜக ஆட்சியில் இருந்ததால், இந்தியாவிற்கு மட்டும் கொரோனா வரவில்லை என்று கூட சொல்வார்கள்.
சேப்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்து வைத்தோம். எதிர்க்கட்சிகள் மற்ற தொகுதிகளுக்கு கிடைக்கவில்லை, சேப்பாக்கம் தொகுதிக்கு மட்டும் தடுப்பூசி கிடைக்கிறது என விமர்சனம் செய்தார்கள். கொரோனா காலத்தில் நடிகர் விவேக் இறந்த பிறகு, ஊசி செலுத்திக்கொள்ள மக்கள் அச்சப்பட்டார்கள்.
மாணவர்கள் புத்தகத்தை நிறைய படிக்க வேண்டும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் கலைஞர் நடமாடும் நூற்றாண்டு நூலகம் தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் 234 கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த புத்தகங்கள் இருக்க வேண்டும். அரங்கம் எண் 315-Bல் புத்தகம் வாங்குகிறீர்களோ, இல்லையோ பார்த்துவிட்டு செல்லுங்கள்” இவ்வாறு அமைச்ச உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.