“தமிழ்நாடு அரசின் திட்டத்தால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்” - தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா!
தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ‘நான் முதல்வன்’
திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு 2024’ மாவட்ட அளவிலான நிகழ்ச்சியை தமிழக தலைமை செயலாளர்
சிவ்தாஸ் மீனா இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:
“நானும் ஒரு அரசுப் பள்ளியில் படித்து தான் இங்கு வந்துள்ளேன் என்று கூறி உரையை
தொடங்குகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஒரு புரட்சிகரமான திட்டங்கள். தொடக்க கல்வி முதல் உயர்கல்வி படிப்புகளுக்கு தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகை வெல்ல தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. வளர்ந்து
வரும் தொழில்நுட்ப படிப்புகள், ஸ்மார்ட் கிளாஸஸ் ஆகியவற்றின் மூலம் இந்தியாவிற்கு முன் மாதிரியாக தமிழ்நாடு அரசு உள்ளது.
பொருளாதாரரீதியாக பின் தங்கிய குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், மாணவர்கள்
தொடர்ந்து பள்ளிக்கு வரவும் காலை உணவு திட்டம் உதவுகிறது. தமிழ்நாடு உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் துறை சார்ந்த திறன்களை பெற
உதவுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவுத்திறன், புத்தாக்க திறன் உள்ளிட்ட பல்வேறு
திறன்களை கொண்டுள்ளனர். திறமையான பள்ளி மாணவர்களை அங்கீகரிக்க நான் முதல்வன் ஒலிம்பியாட் உதவும் என்று நம்புகிறேன்.
30,269 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வி நிறுவனங்களில் சேர
உதவியுள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் முதல்அடி எடுத்து வைக்கும்
மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், கலை, வணிகம், செயற்கை நுண்ணறிவு
உள்ளிட்ட பலவகையான படிப்புகளை தேர்வு செய்ய வழிகாட்டுதலே இந்த கல்லூரி கனவு திட்டத்தின் நோக்கம். மற்ற முதலீடுகளை யார் வேண்டுமானாலும் எடுக்க முடியும். ஆனால் கல்வி என்ற முதலீட்டை எடுக்க முடியாது. இது கடைசி வரை உங்களுடன் இருக்கும். நம் மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
வரும் கல்வியாண்டில் ஜூலை முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்பாடு தொடங்கப்பட
உள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் கட்டாயம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எத்தனை மாணவர்கள் உயர் கல்வியில் சேராமல் உள்ளனர் என்பதை கண்டறிந்து, அனைவரும் கல்லூரியில் சேர என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து எடுத்துரைக்கபடும்.
100 சதவீதம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பது தான் நோக்கம். 30 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு இந்த முயற்சியால் கூடுதலாக சேர்ந்துள்ளனர். புதுமை பெண் திட்டத்திற்கு பின் 20 சதவீதம் சேர்க்கை அதிகரித்துள்ளது” என்றார்.