நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகார் : அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறை சீல்..!
நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகாரில் ஆய்வு செய்த காவல்துறை அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கும் சீல் வைத்துள்ளனர்.
தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக
அறிமுகமானவர் கவுதமி. அதன் பின்பு பல்வேறு பிரபல கதாநாயகர்களுடன் தமிழ்,
தெலுங்கு,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 125 படங்கள் நடித்துள்ளார்.
நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கடந்த மாதம் அளித்தார்.
அதில் அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் தனது சொத்துக்களை மோசடி
செய்து அபகரித்து உள்ளனர். தனது அசையா சொத்துக்களை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் நடிகை கவுதமி தெரிவித்தார்.
குறிப்பாக தனது மகள் நான்கு வயதாக இருக்கும் போது கடத்த 2004 ஆம் ஆண்டு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்
பாதிக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள
சொத்துக்களை விற்க முடிவு செய்ததாக தெரிவிதிருந்தார்.
இந்நிலையில் அழகப்பன் தனக்கு சொத்துக்களை வாங்கவும் விற்கவும் உதவியாக
இருந்ததாகவும், தனது தாய் வசுந்தரா தேவி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 46
ஏக்கர் சொத்துக்களை தான் 17 வயதில் இருந்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை
வைத்து வாங்கியதாக குறிப்பிட்ட நடிகை கவுதமி, தனது உடல்நிலை காரணமாகவும் மகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் பல்வேறு வேலைகளை செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சொத்துக்கள் உட்பட தமிழகத்தில்
உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அழகப்பனை பவர் ஏஜென்டாக மாற்றியதாக தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாகவும் மகளின் படிப்பிற்காகவும் பெரும்பாலான நேரங்களை செலவிட வேண்டிய காரணத்தினால் தனது சொத்துக்கள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து அழகப்பன் மூலமாக விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், அவரின் செயல்பாடுகளை பார்த்து
ஒரு கட்டத்தில் அழகப்பன் மீது மிகுந்த நம்பிக்கை வைக்க ஆரம்பித்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தன்னுடைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் தன்னிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நாடகமாடி சொத்துக்களின் பவர் ஏஜெண்டாக மாறியதோடு மட்டுமல்லாது அது தொடர்பான நடவடிக்கைக்காக பல்வேறு வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு அழகப்பன் மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினர் மோசடி செய்து தனது சொத்துக்களை அபகரித்துள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
அழகப்பன் தன்னை நம்ப வைத்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன் கையெழுத்துக்களை போலியாக பயன்படுத்தி போலியான ஆவணங்களை உருவாக்கி சொத்துக்களை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் குறிப்பாக நான்கு விதமான மோசடிகள் மூலமாகவும் தனது வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல 4 கோடி ரூபாய் பணத்தை வேறு வகையில் மற்றொரு சொத்துக்கள் வாங்குவதாக கூறிக்கொண்டு அழகப்பன் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் மாற்றி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திருவள்ளூர் கோட்டையூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 29 சென்ட் நிலத்தை விற்பனை செய்து நீலாங்கரையில் 6.62 கிரவுண்ட் இடத்தை வாங்கியதாகவும் அந்த சொத்தையும் மோசடி செய்து அபகரித்ததாகவும் தன்னிடம் கேட்காமலேயே அந்த இடத்தில் மின்சார இணைப்பு மற்றும் கட்டிட அனுமதி வாங்கி இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தை கட்டியதும் அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது சொத்து ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அழகப்பன்
மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்த சொத்துக்களை மீட்க முயற்சித்தாகவும்
ஆனால் அரசியல் பலம் மற்றும் அதிகார பலம் காவல்துறை அதிகாரிகள் வைத்து மிரட்டி சொத்துக்களை மீட்க முடியாதபடி செய்துள்ளதாகவும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்
சொத்துக்களை மீட்க முயற்சியில் ஈடுபட்ட தன்னை மட்டுமல்லாது தன் மகளுக்கும்
தனக்கு உதவி செய்யும் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் கொலை மிரட்டல்
கொடுப்பதாக குற்றம் சாட்டி புகாரில் தெரிவித்துள்ளார். தன்னிடம் மோசடி செய்து அபகரித்த சொத்துக்களை மீட்டுத் தருமாறும் கொலை மிரட்டல் விடுக்கும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடிகை கவுதமியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தனர். இந்தநிலையில் நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி தொடர்பாக, காரைக்குடி கோட்டையூர் அழகப்பன் வீட்டில் சென்னை போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வானது நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 12 மணி நேர தொடர்ந்தது. தற்போது ஆய்வு நிறைவடைந்த நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சென்னை கொண்டு செல்லப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.