“பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” - எம்.பி கனிமொழி சோமு கண்டனம்
பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ, எளிய பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை, ஓட்டுக்காக கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.
அந்த காணொலியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கூறியிருப்பதாவது:
எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்காக கொடுக்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை நடிகை குஷ்பு பிச்சை எடுப்பது என்று கொச்சைப்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்பதை லாவகமாக மறந்துவிட்டார். நலத்திட்டங்களை பாராட்டுவதற்காக எப்போதும் வாயை திறக்காத குஷ்பு, வெறுப்பு அரசியல் செய்வதற்காக மட்டும் இன்று வாயை திறந்துள்ளார். பாஜகவின் ஒட்டு வங்கிக்காக கையேந்தும் அவல நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். மணிப்பூரில் நமது சகோதரிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்பட்ட போது, இதே குஷ்பு அன்று எங்கே சென்றார். முடிந்தால் அங்கு சென்று நீங்கள் ஓட்டுக்காக கையேந்துங்கள்.
அதே போன்று ஜார்கண்டில் பெண் பைக்கர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அதற்கு வாயை திறக்காத குஷ்பு, இன்று இதற்கு மட்டும் வாக்குக்காக கையேந்தியுள்ளார். முடிந்தால் ஜார்கண்டில் சென்று வாக்குக்காக கையேந்துங்கள்.
இப்படி நீங்கள் எங்கு சென்று வாக்குக்காக கையேந்தினாலும் எங்குமே உங்களுக்கு எதுவும் கிடைக்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குஷ்புவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.