“கும்பகோணம் ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்” - தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்!
கும்பகோணம் ரயில் நிலையத்தில் எந்தெந்த பணிகள் நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக வரைபடங்கள் தயாரித்து பொது மேலாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்வையிட்ட தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் RN சிங் அதில் சிலவற்றை திருத்தம் செய்தார். பொது மேலாளர் திருத்தம் செய்த வரைபடத்தை ரயில்வே பொறியாளர்கள் விரைந்து எடுத்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்
ஆர்.என்.சிங், கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் மதிப்பில் முற்றிலுமாக புனரமைக்கப்பட உள்ளது என்றும், இதன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு
ரயில்கள் இயக்குவது என்பது குறித்து திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகிறது .
அது முடிந்ததும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இரட்டை ரயில் பாதை முக்கியமல்ல;
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பாக கேளுங்கள் என தெரிவித்தார்.
கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் இடையே புதிய ரயில் பாதை குறித்து கேட்டதற்கு பதில் ஏதும் தராமல் பொது மேலாளர் ஆர்.என். சிங் புறப்பட்டு சென்றார்.