For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
09:10 AM Apr 09, 2025 IST | Web Editor
 குமரி அனந்தன் மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு    முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவரும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93. இந்த நிலையில், குமரி அனந்தனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

Advertisement

"காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தனது அயராத உழைப்பால் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொண்டாற்றினார்.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி இதுகுறித்து குறிப்பிடும்போது. "தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்" எனப் புகழாரம் சூட்டினார். தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி பெருமை கொண்டோம். விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது.

ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன்.
'தகைசால் தமிழர்' குமரி அனந்தனின் மறைவால் வாடும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement