#KrishnaJayanthi - மதுரையில் சிறப்பாக நடைபெற்ற வழுக்கு மர திருவிழா!
மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் விழாவில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மதுரை திருப்பாலை வடக்கு மாசி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா இரண்டு வாரங்கள் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, வழுக்கு மரம் ஏறும் விழா கிருஷ்ணன் கோயில் அருகில் உள்ள ராமாயணம் சாவடி முன்பாக நடைபெற்றது. இதற்காக 20 அடி உயரமுள்ள மரக் கம்பத்தில் எண்ணெய் தடவப்பட்டு, மரத்தின் உச்சியில் பட்டு துணிக் கட்டப்பட்டிருந்தது.
போட்டியாளர்கள் வழுக்கும் அந்த மரத்தில் ஏறி பட்டுத்துணியை எடுக்க வேண்டும். இந்த விழாவில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலர் ஆர்வமுடன் ஏறி, மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பட்டு துணியை எடுக்க முயன்றனர். பலரும் வழுக்கி கீழே விழுந்தனர். நீண்ட போரட்டத்திற்கு பின்னர், இளைஞர் ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் உச்சியில் இருக்கும் பட்டுத் துணியை அவிழ்த்தார்.
இதனைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வழுக்கு மர திருவிழாவை நூற்றுக்கும் மேட்பட்ட குழந்தைகள், பெண்கள் கண்டு களித்தனர்.