For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#America-வில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு!

09:31 PM Sep 06, 2024 IST | Web Editor
 america வில் இருந்து ரூ 5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை மீட்பு
Advertisement

ரூ.5 கோடி மதிப்பிலான கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மூலமாக மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவின் காவல் துறைத்தலைவர் தினகரனின் வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமாரின், மேற்பார்வையிலும் தனிப்படை அமைத்து, வெளிநாட்டு தனியார் கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் ஏதேனும் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இணையதளங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த தனிப்படையினர் இணையதளங்களில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்ட போது, 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘Gold of the Gods’ என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள சிலை) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இணையதளங்களில் இந்த சிலை குறித்த தகவல்களை தனிப்படையினர் சேகரிக்கத் தொடங்கினர். அப்போது, கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பின் கைவசம் இருப்பதையும் தனிப்படையினர் தெரிந்துகொண்டனர்.

தொடர் விசாரணையில், இச்சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர் காலமான 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இது குறித்து ஆராய்ந்தபோது, கலியகல்கி என்ற கலிய மர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை 2005ம் ஆண்டிற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டு, விற்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று சந்தேகிப்படுகிறது.

தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரின் அயராத முயற்சியினாலும், சர்வதேச கூட்டு முயற்சியினாலும், இந்த சிலை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு கைப்பற்றி பாங்காங் அரசிடம் 11.10.2023 அன்று ஒப்படைத்தனர். பின்னர், பாங்காங்கில் உள்ள இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை ஆகியோர்களின் மூலம் தாய்லாந்து அரசாங்த்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதியாக கடந்த 04.09.2024 அன்று தமிழ்நாடு சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு தனிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சிலையானது, கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம் கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த சிலையின் மதிப்பு ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த சிலை எந்த கோயிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement