கோயம்பேடு முதல் பட்டாபிராம் மெட்ரோ ரயில்... விரிவான திட்ட அறிக்கை சமர்பிப்பு!
09:11 PM Feb 21, 2025 IST | Web Editor
Advertisement
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
முன்மொழியப்பட்ட மெட்ரோ வழித்தடம், தற்போதுள்ள கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் தொடங்கி, பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராமில் (Outer Ring Road - வெளிவட்டச் சாலையில்) முடிவடைகிறது.
இது அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் அம்பத்தூர் OT, ஆவடி இரயில் நிலையம், பேருந்து முனையம் மற்றும் வெளிவட்டச் சாலை (ORR) போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
திட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக இது மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பேருந்து நிலையத்திற்கு முன்னால்) நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
வழித்தடத்தின் மொத்த நீளம்: 21.76 கி.மீ
உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 19
மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,744 கோடி. (மூன்று மேம்பாலச் சாலை ஒருங்கிணைப்பு உட்பட).”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement