#KolkattaDoctorMurder | ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது!
பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல நாட்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கிடையே பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமின்றி, முதுநிலை மருத்துவர்கள் தேர்ச்சிக்கு பணம் பெறுவது, மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கம் , கடத்தல் போன்றவற்றிக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொல்கத்தாவின் பெலிகத்ரா குடியிருப்புப் பகுதியில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்தில் கடந்த 25ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 15 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.