#KolkataDoctorMurderCase- சந்தீப் கோஷ்-ன் மருத்துவர் அங்கீகாரம் பறிப்பு!
சிபிஐயால் கைது செய்யப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷின் மருத்துவர் அங்கீகாரத்தை மேற்கு வங்க மருத்துவ ஆலோசனைக்குழு ரத்து செய்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் வெடித்தன. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மறுபக்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆர்.ஜி.கார் மருத்துவமனையின் டீனாக இருந்த சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பெண் டாக்டர் கொலைக்கு பிறகு மருத்துவமனையில் தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக சிபிஐயும் கைது செய்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மருத்துவர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களின் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மருத்துவச் சட்ட விதிகளின்கீழ் அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் அவரது மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவரது பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு பதிலளிக்க மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது. அதற்கு சந்தீப் கோஷ் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.