"குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி" - பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து #RahulGandhi காட்டம்!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் இன்று (ஆக.14) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்களால் மருத்துவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மீதும் மாநில நிர்வாகம் மீதும் கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களிலே மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் அனுப்பி படிக்க வைப்பார்கள் என்று இந்தச் சம்பவம் யோசிக்க வைக்கிறது.
कोलकाता में जूनियर डॉक्टर के साथ हुई रेप और मर्डर की वीभत्स घटना से पूरा देश स्तब्ध है। उसके साथ हुए क्रूर और अमानवीय कृत्य की परत दर परत जिस तरह खुल कर सामने आ रही है, उससे डॉक्टर्स कम्युनिटी और महिलाओं के बीच असुरक्षा का माहौल है।
पीड़िता को न्याय दिलाने की जगह आरोपियों को…
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2024
நிர்பயா வழக்கிற்கு பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன? பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு எப்படியேனும் நீதி கிடைக்க வேண்டும். சமுதாயத்தில் முன் உதாரணமாக இருக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்"
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.