For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Kolkata | பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. பேரணி!

08:45 AM Sep 22, 2024 IST | Web Editor
 kolkata   பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு தீப்பந்தம் ஏந்தி 42 கி மீ  பேரணி
Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி 42 கிலோ மீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டனர்.

Advertisement

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் படுகொலை தொடர்பாக, காவல் துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) என்பவரை காவல் துறை கைது செய்தது.

இந்தப் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், காவல் துறை அதிகாரி அபிஜித் மண்டல் ஆகிய இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது, கொலை நடந்த இடத்தில் போலீஸார் திட்டமிட்டு ஆதாரங்களை அழித்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டை வைத்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் கடந்த 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று முன்தினம் மருத்துவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். அவர்களின் நிபந்தனைப்படி போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதேசமயம், தங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று (செப். 21) பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் தீப்பந்தம் ஏந்தி 42 கிமீ நடைபயணம் மேற்கொண்டனர். “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். இந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தி உடனேநீதி வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மருத்துவர்கள், மாற்றுத் திறனாளி சங்கத்தினர், ஐடி ஊழியர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement