#Kolkata மருத்துவர் கொலை : தூக்கு தண்டனை வழங்கக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணி!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணியில் பங்கேற்றார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் இறுதிக்கெடு விதித்திருந்தார்.
இதையும் படியுங்கள் :“#VineshPhogat இறந்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன்” – பயிற்சியாளர் வோலர் அகோஸ் பதிவு!
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுடன் நடத்திய பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் "நாங்கள் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விரும்புகிறோம்" என கோஷம் எழுப்பினர். "பொதுமக்களின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறோம். அவர்கள் சரியான விசயத்தை செய்தார்கள்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.