#Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், இழப்பீட்டுத் தொகை பெற மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள உயிரிழந்த மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார்.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: #onlineregistration துவக்கம்!
இது தொடர்பாக உயிரிழந்த மருத்துவரின் தந்தை கூறியதாவது :
"போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி. எங்களுடன் துணை நிற்கும் அனைவரையும் எனது மகன் மற்றும் மகளாகத்தான் பார்க்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை நிராகரித்துவிட்டேன், அது எனது மகளின் மரணத்துக்காக, இழப்பீட்டுத் தொகையை நான் பெற்றுக்கொண்டால், அது எனது மகளுக்கு மன வலியை ஏற்படுத்தும். எனக்கு நியாயம்தான். சிபிஐ அதிகாரிகள், ஒட்டுமொத்த குடும்பத்தினரின் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டனர். குற்றவாளியை விரைவாகக் கண்டுபிடித்து கைது செய்வோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்திருக்கின்றனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.