துப்பாக்கி முனையில் கடத்தல்... 14 வழக்குகள் நிலுவை... ஞானசேகரனின் குற்றப் பிண்ணனி குறித்து அதிர்ச்சி தகவல்!
சென்னை கிண்டி அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற தொழிலதிபரை, அவரது காருடன் ஞானசேகரன், அவரது கூட்டாளிகள் சுரேஷ் மற்றும் முரளி ஆகியோர் புதுச்சேரிக்குக் கடத்திச் சென்று ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதித் தொகையை மதுராந்தகம் மேம்பாலத்தின் மீது, அவரது குடும்பத்தினர் கொடுத்தபோதும், ஞானசேகரன் கும்பல் அதனைப் பெற்றுக்கொண்டு, முத்துக்குமாரை விடுவிக்க மறுத்துள்ளது.
பிறகு மொத்தத் தொகையை குடும்பத்தினர் அளித்தபோது, மறைந்திருந்த காவல்துறையினர், ஞானசேகரன் உள்ளிட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த குற்றச் சம்பவத்தில் ஞானசேகரனின் தாய் மற்றும் மனைவியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் மற்றொரு கடத்தல் வழக்கிலும் ஞானசேகரன் உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டதாகவும், கொள்ளை, திருட்டு என சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட
பல்வேறு காவல் நிலையங்களில் ஞானசேகரன் மீது 14 வழக்குகள் இருப்பதாகவும், அதில் 6
வழக்குகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலை. சம்பவம்
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை
செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது
செய்யப்பட்டார். ஞானசேகரனால், வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற
கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, ஞானசேகரன் கைப்பேசியை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த கைப்பேசியில் ஞானசேகரன் ஏற்கெனவே சில பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், அந்த வீடியோக்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் சில வீடியோக்களில் இருக்கும் பெண்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என்பதும், சில வீடியோக்களில் இருப்பது திருநங்கைகள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், சில வீடியோக்களில் இருக்கும் பெண்கள் யார் என்பதை காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும், அந்த பெண்களையும் மிரட்டி ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்தாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஞானசேகரனின் 3 மனைவிகளிடமும், அவரது தோழியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.