மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு! தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் நேற்று போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை குஷ்பு, “தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்களா? என பேசியிருந்தார்.
குஷ்புவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குஷ்புவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும், பல கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திமுக மகளிர் அணிச்செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் மகளிர் பலர் குஷ்புவின் உருவப்படத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான திருநங்கை ரியா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக குஷ்புவின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றபோது திமுக மகளிரணிக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் திமுக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மகளிரணி தலைவர் குஷ்புவின் உருவப்படத்திற்கு தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். இதனை போலீசார் தடுத்து தீயை அணைத்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குஷ்புவுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
நாமக்கல் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகிலும் குஷ்பூவை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.